இறுதிச்சுற்றில் நுழைவது யார்? மும்பை-பெங்களூர் இன்று மோதல்்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் பெங்களூரைச் சந்திக்கிறது மும்பை.இரு அணிகளுமே இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பதால் இந்த முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேற கடுமையாகப் போராடும். பெங்களூர் அணியைப் பொறுத்தவரையில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்கான முதல் வாய்ப்பை சென்னையிடம் தோற்று கோட்டைவிட்டது. இதனால் இரண்டாவது வாய்ப்பில் மும்பையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் எண்ணத்தோடு களமிறங்கும்.
பெங்களூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கெயில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் 10 ஓவர்கள் களத்தில் நின்றாலே ஆட்டத்தை திருப்பிவிடுவார். அவர் 519 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
இதேபோல் விராட் கோலியும் சிற்பபாக ஆடி வருகிறார். கடந்த ஆட்டத்தில் 70 ரன்கள் எடுத்து பெங்களூர் ரன் உயர்வுக்கு உதவினார். பந்துவீச்சில் ஜாகீர்கான், டேனியல் வெட்டோரியை நம்பியே அந்த அணி உள்ளது. மும்பை அணியைப் பொறுத்தவரையில் சச்சின், பிளிஸ்ஸார்டு ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடினர். ஆரம்பத்தில் அசத்தலாக ஆடி வந்த ரோஹித் சர்மா, ராயுடு ஆகியோர் கடந்த சில ஆட்டங்களில் ரன் குவிக்கத் தவறிவிட்டனர். கடைசி வரிசையில் பிராங்க்ளின் பலம் சேர்க்கிறார்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் மலிங்கா முக்கியப் பங்கு வகிக்கிறார். அவர் நிச்சயம் பெங்களூர் வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். மொத்தத்தில் இரு அணிகளுமே வெற்றிக்குப் போராடும் என்பதால் சென்னையில் நடைபெறும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
கொல்கத்தாவை வெளியேற்றியது மும்பை
மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் மும்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் தோற்றதன் மூலம் கொல்கத்தா போட்டியிலிருந்து வெளியேறியது. முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியில் காலிஸ் 7 ரன்களில் வெளியேறினார். கம்பீர் 4 ரன்களில் ஹர்பஜன் பந்துவீச்சில் போல்டு ஆனார். கோஸ்வாமி ரன் ஏதுமின்றியும், திவாரி 4 ரன்களிலும் வெளியேற கொல்கத்தா 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சரிவுக்குள்ளானது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பதானும், தஸ்சாத்தேவும் அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். பதான் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் தஸ்சாத்தே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இதனிடையே ஷகிப் அல்ஹசன் 26 ரன்களில் வெளியேறினார். தஸ்சாத்தே ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாச கொல்கத்தா 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிளிஸ்ஸôர்டு அதிரடி: பின்னர் ஆடிய மும்பை அணியில் சச்சின் நிதானமாக ஆடியபோதும், பிளிஸ்ஸôர்டு வெளுத்து கட்டினார். பதான் வீசிய 5-வது ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விரட்டினார் சச்சின். இதனால் 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது மும்பை. பிரெட் லீயின் 8-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரைசதம் கண்ட பிளிஸ்ஸôர்டு அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா ஒரு பந்தைக்கூட சந்திக்காத நிலையில் ரன் அவுட் ஆனார். 28 பந்துகளைச் சந்தித்த சச்சின் 36 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் பிராங்க்ளின் அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் பிராங்க்ளின் ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஹர்பஜன் சிக்ஸர் அடித்தார். இதன்மூலம் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துவெற்றிபெற்றது. பிராங்க்ளின் 29 ரன்களுடனும், ஹர்பஜன் சிங் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 விக்கெட் வீழ்த்திய முனாப் படேல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். சுருக்கமான ஸ்கோர்
கொல்கத்தா - 147/7 (தஸ்சாத்தே 70*, முனாப் 3வி/27)
மும்பை - 148/6 (பிளிஸ்ஸôர்டு 51, சச்சின் 36)
தோள்பட்டையில் காயம்: மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் கம்பீர் விளையாடுவது சந்தேகம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கெüதம் கம்பீருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் விளையாடுவாரா, இல்லையா என்பது உறுதி செய்யப்படும்.ஒருவேளை காயம் பலமாக இருக்கும் பட்சத்தில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கம்பீருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மே 22-ம் தேதி நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது காயம் மேலும் அதிகமாகியுள்ளது. மும்பைக்கு எதிரான பிளே ஆப் சுற்றில் அது மேலும் பெரிதாகியுள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர்முழுவதுமே கம்பீர் தனது காயத்தை மறைத்து விளையாடியுள்ளார்.
இதுகுறித்து கம்பீர் கூறுகையில், "காயம் தொடர்பாக ஸ்கேன் எடுத்துள்ளேன். ஸ்கேன் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியாது' என்றார்.
பிசிசிஐ அதிகாரிகள் கூறுகையில், கம்பீர் விவகாரத்தை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. காயத்தோடு விளையாடிய கம்பீர் மீதும், அவரை விளையாட வைத்த கொல்கத்தா அணி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
கம்பீர் காயம் ஏற்பட்டிருந்தது என்றால் அவரை ஏன் அணியில் இருந்து விலக்கவில்லை. காயத்தை எளிதாக எடுத்துக் கொண்டு அவரை ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட வைத்தது ஆச்சர்யமாக உள்ளது' என்றனர். கொல்கத்தா அணியின் உடலியக்க நிபுணர் ஆன்ட்ரூ லீபஸ் கம்பீரின் காயம் தொடர்பாக பிசிசிஐ செயலர் சீனிவாசனுக்கு மருத்துவ அறிக்கையை அளித்துள்ளார். அதில் கம்பீர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய 4 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். ஐபிஎல் போட்டியில் விளையாட வந்தபோதே தோள்பட்டை காயத்தோடே விளையாட வந்தார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காயம் குணமாக 6 வாரம் ஆகலாம் என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் கம்பீர் விளையாடமுடியாமல் போகலாம். கேப்டன் தோனி, சச்சின், ஜாகீர்கான், சேவாக் ஆகியோர் விளையாடாத நிலையில் இப்போது கம்பீருக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. காயத்தை மறைத்து ஐபிஎல் முழுவதும் விளையாடியுள்ள கம்பீரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயம் உறுதியானால் நீக்கப்படுவார்
காயம் இருப்பது உறுதியானால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து கம்பீர் நீக்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் சீனிவாசன் கூறியது: கம்பீரின் தோள்பட்டை காயம் தொடர்பாக கொல்கத்தா அணியின் உடலியக்க நிபுணர் லீபஸ், ஸ்கேன் பரிசோனை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அறிக்கையை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அனுப்பப்படமாட்டார். அவருக்குப் பதிலாக மாற்றுவீரரை அனுப்புவது குறித்து முடிவு செய்வோம் என்றார்.