Home Page    
  Religion    
  Politics    
  Daily News    
Our Services
  Our Profile Details    
  Entertainments    
  Nallur Photos    
  Free Downloads    
  Contact Us    
     
       
   
 

               
  பேரவை தே.மு.தி.க. குழு தலைவர் விஜயகாந்த்
 

சட்டப்பேரவை தே.மு.தி.க. தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பேரவை குழுவின் துணைத்தலைவராக அந்தக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் (ஆலந்தூர் தொகுதி), கொறடாவாக வி.சி. சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு தொகுதி) ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் அண்மையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, கட்சியின் தலைமை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக பேரவையில் அதிக இடங்களைப் தே.மு.தி.க. பெற்றுள்ளது. இதனால், அந்தக் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது. பேரவையின் தே.மு.தி.க. தலைவராக விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரே பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட உள்ளார்.

  பேரவைத் தலைவராக ஜெயகுமார் இன்று தேர்வு
 

14-வது சட்டப் பேரவையின் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த டி.ஜெயகுமார் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்படுகிறார். பேரவைத் தலைவர் பதவிக்கு அவரைத் தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், போட்டியின்றி ஒருமனதாக அவர் தேர்வாகிறார்.இதேபோன்று, பேரவை துணைத் தலைவர் பதவிக்கும் ஆளும் கட்சியைச் சேர்ந்த ராசிபுரம் எம்.எல்.ஏ. தனபால் தேர்வு செய்யப்படுகிறார்.14-வது சட்டப் பேரவையின் கூட்டம், மே 23-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்புக்குப் பிறகு பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தலை பேரவையின் தாற்காலிகத் தலைவரான செ.கு.தமிழரசன் அறிவித்தார். "மே 26-ம் தேதி நண்பகலுக்குள் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்' எனக் கூறியிருந்தார். அன்றைய தினத்திலேயே அதிமுக சார்பில் பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக ராயபுரம் எம்.எல்.ஏ. டி.ஜெயகுமாரும், ராசிபுரம் எம்.எல்.ஏ. தனபாலின் பெயரும் அறிவிக்கப்பட்டது.

மனு தாக்கல்: இருவரும் வியாழக்கிழமை காலையில், சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீனிடம் மனு அளித்தனர். இந்த மனுவை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார். அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் வழிமொழிந்தார். இதேபோன்று, பேரவை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனபாலும் மனுதாக்கல் செய்தார்.
போட்டியில்லை: பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிட டி.ஜெயகுமார், பேரவை துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட தனபால் என இருவர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட மனு செய்வதற்கு
வியாழக்கிழமை கடைசி நாளாகும். மனுதாக்கல் செய்ய காலம் முடிவடைந்த நிலையில், இருவரைத் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.

பேரவை இன்று கூடுகிறது: பேரவைத் தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது தாற்காலிக தலைவரான செ.கு.தமிழரசன், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான முடிவுகளை அறிவிப்பார். அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, டி.ஜெயகுமாரை அவை முன்னவரான ஓ.பன்னீர் செல்வமும், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தும் பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைப்பர்.
பேரவையின் புதிய தலைவருக்கு முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவிப்பர். அதன்பின், பேரவைத் தலைவர் ஏற்புரை ஆற்றுவார் என சட்டப் பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் 3-ல் ஆளுநர் உரை: பேரவைத் தலைவர் தேர்வுக்குப் பிறகு, சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.14-வது பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகிறார். புதிய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை அவர் அறிவிப்புகளாக வெளியிடுவார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள், அறிவிப்புகளே ஆளுநர் உரையில் அதிகம் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் பேரவையில் ஒரு வார காலம் நடைபெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

  ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
 

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 1991-96-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது.உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அந்த வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி பி.எம்.மல்லிகார்ஜுனையா முன்னிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தசாமி, இந்த வழக்கில் ஆஜராகி வந்த மூத்த வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், அவரால் இந்த வழங்கில் ஆஜராகி வாதாட முடியவில்லை. எதிர்தரப்பில் (ஜெயலலிதா) வாதாட புதிய வழக்கறிஞர் நியமிக்க கால அவகாசம் தேவை என்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இதற்கு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எதிர்ப்பு தெரிவிக்காததால், வழக்கு விசாரணையை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

  சமச்சீர் கல்வி: அதிமுக அரசுக்கு இந்திய கம்யூ. கேள்வி
 

சமச்சீர் கல்வித் திட்டம் என்ற கொள்கையை அதிமுக அரசு ஏற்கிறதா? அல்லது நிராகரிக்கிறதா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக திட்டவட்டமாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "சமச்சீர் கல்வித் திட்டம் என்பது பல ஆண்டுகளாக கல்வியாளர்களால் வற்புறுத்தப்பட்டு நீண்ட விவாதத்துக்கு பிறகு சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக கல்வித் துறையில் சமச்சீர் கல்வி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்து பொதுவாக அனைத்துக்கட்சியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தமிழக அரசு இப்போது அதனை ஒத்திவைப்பதாக அறிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே சமச்சீர் கல்வி திட்டம் என்ற கொள்கையை அதிமுக அரசு ஏற்கிறதா? நிராகரிக்கிறதா? என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்த வேண்டும்.
கொள்கையளவில் ஏற்றுக்கொண்டு குறைகள் இருக்கிறது என்பதால் அதனை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்துவதில் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அதற்கான காரணங்களை விளக்கி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் குறிப்பாக கல்வித் துறையினர் மத்தியில் எழுந்துள்ள குழப்பத்தை தீர்த்து வைக்கவேண்டும்.தலைமைச் செயலகம்...தமிழக சட்டப் பேரவைக்காகவும் தலைமை செயலகத்திற்காகவும் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கட்டுமானப்பணிகள் நிறைவு பெறவில்லை.
எஞ்சியுள்ள பணியையும் தொடர்ந்து நடத்தி முடித்து மக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்ட கட்டடம் அரசு நிர்வாகப் பணிக்காகவோ மக்களுக்காகவோ உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.சட்டப்பேரவைக் கூட்டங்கள் வருடத்தில் 120 நாட்கள் நடைபெறும். அதைவிட விடுமுறை நாட்கள் நீங்கலாக வருடம் முழுமையும் பயன்படுத்தும் வகையில் அரசுப்பணிகளுக்காக புதிய கட்டிடத்தை பயன்படுத்துவதில் தவறு இல்லை. பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முக்கியமே  தவிர எதற்கு பயன்படுத்துவது என்பதை ஆளும் கட்சி தீர்மானிக்கலாம்.

ஜூன் 6-ம் தேதியே மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறப்பது என்ற தமிழக அரசு அறிவிப்பை தமிழக விவசாயிகள் வரவேற்றிருப்பது போலவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் வரவேற்கிறது," என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

 

  2ஜி:மொரானி ஜாமீன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு
 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சினியுக் பிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் கரீம் மொரானியின் ஜாமீன் மனு மீதான உத்தரவை, வரும் 30-ம் தேதிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய ரூ.200 கோடி தொகை, டிபி ரியால்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு பரிமாற்றம் செய்வதற்கு மொரானி வழிவகுத்தாக, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஏ.கே.சிங் வாதிட்டார்.இந்த பணப் பரிமாற்றத்துக்காக, சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கரீம் மொரானி ரூ.6 கோடி பெற்றுக் கொண்டதாக சிபிஐ தரப்பு குற்றம்சாட்டியது.
முன்னதாக, மொரானி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து அவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார்.மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.நெஞ்சுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அவர் பல நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருவதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

 

  போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீட்டு முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்; பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
 
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. இதையடுத்து ஜெயலலிதா வீட்டு முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்.  காலை 9 மணி முதல் இனிப்புகள் வழங்கி தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
 
ஜெயலலிதா வீட்டுக்குள் இருந்து விண்ணில் சென்று வெடித்து சிதறும் விலை உயர்ந்த பட்டாசு பாக்கெட்டுகள் எடுத்து வரப்பட்டு வெடிக்கப்பட்டன. மகளிர் அணியினர் அம்மா வாழ்க, ஜெயலலிதா வாழ்க என்கிற கோஷங்களை எழுப்பியபடி குத்தாட்டம் போட்டனர்.   நேரம் செல்லச்செல்ல ஜெயலலிதா வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் மிகவும் திணறினார்கள்.
 
இந்த வெற்றி கொண்டாட்டத்தை இந்திய டி.வி. சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. போயஸ் கார்டனுக்கு வந்த அனைத்து தொண்டர்கள் கையில் இனிப்பு பட்டாசுகளுடன் வந்தார்கள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டு அருகே வசிக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட் டன. மதியம் 12 மணி அளவில் ஜெயலலிதா வீட்டிற்கு செல்லும் தெரு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்களின் தலையாகவே காட்சி அளித்தது.
 

அந்த தெரு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தபடியே இருந்தனர். கருணாநிதிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார்கள். அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.   தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமா னதை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளும் ஜெயலலிதா வீட்டு முன்பு குவியத் தொடங்கினர்.
 
தேனாம் பேட்டை உதவி கமிஷனர் ரங்கராஜன் காலை 9.30 மணி அளவில் ஜெயலலிதா வீட்டுக்கு வந்தார். அதனை தொடர்ந்து மயிலாப்பூர் துணை கமிஷனர் ராஜேந்திரன், தி.நகர் துணை கமிஷனர் சண்முகவேல், தென் சென்னை இணை கமிஷனர் பெரியய்யா, போக்குவரத்து இணை கமிஷனர் சத்திய மூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளும் ஜெயலலிதா வீட்டுக்கு வந்தனர். உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் ஜெயலலிதா வீட்டு முன்பு திரண்டிருந்தனர்.  
 
வில்லிவாக்கம் சவுமிய தாமோதர பெருமாள் கோவில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் ஆகியவற்றின் பிரசாதங்களை கோவில் குருக்கள் எடுத்து வந்திருந்தனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள், ஜெயலலிதா வீட்டுக்குள் எடுத்துச்சென்று அவரிடம் கொடுத்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் வந்து ஜெயலலிதாவுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.  
 
ஜெயலலிதா வீட்டு முன்பு கூட்டணி கட்சி தொண்டர்களும் திரண்டனர். அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் தலைமை செயலகத்தின் பின்னணியில் ஜெயலலிதா இருப்பது போன்ற பிரமாண்ட பேனர் ஒன்றை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினார். திரைப்பட உதவி இயக்குனர்கள் சார்பிலும் ஜெயலலிதா வீட்டு முன்பு பேனர் கட்டப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தை மீட்டெடுத்த தங்கத்தலைவியே, திரையரங்குகளை மீட்டு உதவி இயக்குனர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
வக்கீல் பிரிவு செயலாளர் மனோஜ் பாண்டியன், வக்கீல் இன்பத்துரை, டாக்டர் வெங்கடேசன், நடிகர்கள் ஆனந்தராஜ், குண்டு கல்யாணம் ஆகியோரும் ஜெயலலிதா வீட்டில் திரண்டிருந்தனர். கவிஞர் விரை கறீம், தலைமைக்கழக பேச்சாளர் சிட்கோ சீனு உள்ளிட்டோர் இனிப்புகள் வழங்கினர். மயிலாப்பூரில் மயிலை ராஜேஷ்கண்ணா தலைமை யில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தனர். அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் மாணவர் அணி நீலகண்டன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
 
மகாகவி பாரதிநகரில் முன்னாள் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஏ.என். சுப்பிரமணி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார். சின்னதம்பி, சக்திவேல் போட்டோ சேகர், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கிறது; தி.மு.க., அமைச்சர்கள் பலர் தோல்வி
 

தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. இதுவரை முன்னணி நி‌லவரம்தான் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் அ.‌தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியனில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி துவங்கியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கேரளாவில் .காங்கிரஸ் 73 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 66 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.அசாமில் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், அசாம் கனபரிஷத் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ., 8 வது இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.மாலை 5 மணிக்குள் முழு முடிவுகள் நிலவரம் தெரி்ந்து விடும். முடிவுகளை வாசகர்கள் நிமிடத்துக்கு நிமிடம் தெரிந்து கொள்ளும் வகையில் தினமலர் இணையதளம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

வாசகர்களின் வசதிக்காக அவ்வப்போது உரிய மாற்றங்களைச் செய்து புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி வரும் தினமலர் இணையதளம் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் வழங்கி சாதனை படைத்தது போலவே சட்டசபை தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் வெளியிட உள்ளது. இதற்காக 500 பேர் கொண்ட சிறப்பு குழுவினர் 234 தொகுதிகளிலும் பணியாற்ற உள்ளனர்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெறும் வாக்குகள், கட்சிகளின் முன்னணி நிலவரம், கூட்டணிகளின் முன்னணி நிலவரம், வெற்றி - தோல்வி விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக சிறப்பான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் நிமிடத்திற்கு நிமிடம் 234 தொகுதி நிலவரமும் வெளியிடப்படும். அனைத்து தொகுதிகளின் முடிவுகள் வெளியாகும் வரை தொடர்ந்து முன்னணி நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதேபோல தேர்தல் நடந்த பிற மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளையும் தினமலர் இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் எந்தவித தடங்கலும் இல்லாமல் இணையதளத்தை பார்வையிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்திலான சர்வர்களுடன் செயல்படும் தினமலர் இணையதளம் கடந்த 9ம் தேதி இந்திய செய்தி இணையதளங்கள் இதுவரை எட்டியிராத ஒரு உச்சத்தை எட்டிப்பிடித்தது. அன்றையதினம் பிளஸ்2 தேர்வு முடிவுகளை முதலில் வெளியிட்ட தினமலர் இணையதளத்தை 192 நாடுகளைச் சேர்ந்த 8 லட்சத்து 80 ஆயிரத்து 458 வாசகர்கள் 11 லட்சத்து 6 ஆயிரத்து 585 முறை பார்வையிட்டுள்ளனர். பார்வையிடுபவர்கள் எண்ணிக்கை, அவர்கள் பார்வையிடும் நேரம், பார்வையிடும் பக்கங்கள் அடிப்படையில் ராங்க் வழங்கிவரும் அலெக்ஸா டாட் காம் இணையதளம், தினமலர் இணைய தளத்திற்கு மே 9ம் தேதியன்று 934வது ராங்கை அளித்துள்ளது. தினமலர் வெளியிடும் தகவல்கள் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த சாதனை நிகழ்ந்தது.

Copyright © 2010 Kadayanallur.Net All Right Reserved